logo
திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் யோசனை- இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி.. திமுக கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம்

திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் யோசனை- இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி.. திமுக கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம்

04/Mar/2021 01:03:26

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் வியாழக்கிழமை) கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் 24 தொகுதிகளை மட்டுமே அளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை சார்பில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீரப்ப மொய்லி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.


திமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது வெளியோறிவிடலாமா  என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை காங்கிரஸ் கட்சித் தலைமை ஆலோசனை நடத்தும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் கருத்துகளைக் கேட்டு திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து  இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

  திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு



 தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு போன்றவற்றில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதலாவதாக, திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கிரஸ் கட்சியுடன் புதன்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் குழப்பம் நீடிக்கிறது.அதேசமயம் திங்ள்கிழமை  நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும், எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து என்ற தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்க்கும் நிலையில் திமுக தரப்பு அதற்கு முன்வராததால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.

Top