logo
கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற  தனி தொலைபேசி எண் அறிவிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற தனி தொலைபேசி எண் அறிவிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

10/Apr/2021 09:31:42

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  மாவட்டத்துக்கு   நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் ஷம்புகல்லோலிகர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கைத்தறி, துணிநூல்துறை அரசு முதன்மைச்செயலர்  அரசு அலுவலர்களுடன் ஆய்வு  மேற்கொண்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று உள்ளவர்களாக 205 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் தற்பொழுது    60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட  1,500 -க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருத்துவ வசதி உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று தவறாமல் கொரோனா தடுப்பூசி  செலுத்திக் கொள்ளலாம். 

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு  ரூ.200 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடை உரிமையா ளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை மீறும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும். 

தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற தொலை பேசி எண்

கொரோனா தடுப்பூசி  மிகவும் பாதுகாப்பானதாகும். எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி  குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக  தொலைபேசி எண் அறிவிக்கப்படும். பொதுமக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. அரிதாக சிலருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிருக்கு எவ்வித பாதிப்பும்  இருக்காது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு:

முகக்கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்கள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குடுமியான்மலை ஸ்டாமின் கட்டிடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று புதுக்கோட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதிகள் பொதுப்பணித்துறையின் மூலம்  சீரமைக்கப்பட்டு  தயார்  நிலையில்  வைக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவர்களும்  தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே இடத்தில்  3  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்  அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள்  என இதுவரை ஏதுமில்லை என்றார்  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி . 

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதார துணை இயக்குநர்கள் பா. கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top