logo
இரண்டாவது அலை கொரோனா தொற்றைத்தடுக்க ஊரடங்கு: பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த  அனுமதி

இரண்டாவது அலை கொரோனா தொற்றைத்தடுக்க ஊரடங்கு: பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி

09/Apr/2021 05:56:18

புதுக்கோட்டை, ஏப்: கொரோனா தொற்று இரண்டாவது அலையை தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள  தளர்வுக ளுடன் கூடிய ஊரடங்கு நாளை(10.4.2021) முதல்அமல்படுத்தப் படும் நிலையில், மைதானங்களில் பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் 10.4.2021 முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். 

கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்படுகிறது. 31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும்  வழிபாடு நடத்த பொதுமக்களுக்கு  இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலர்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப் படுத்துவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.

 மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத  இருக்கைகளுக்கான பார்வையாளர்கள்  மட்டுமே  அனுமதிக்கப்படுவர்.

மேலும் 10.4.2021 முதல் மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதேபோன்று விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையா ளர்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும். எனவே கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்பி.உமாமகேஸ்வரி.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநப் எம்.சந்தோஷ்குமார், பொது சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Top