logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 37,942 கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 37,942 கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

30/Jan/2021 07:54:33

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்  சமுதாயக் கூடத்தில்  தொழிலாளர் நலத்துறை  சார்பில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் சனிக்கிழமை (30.01.2021)  நடைபெற்ற நிகழ்வில்கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை  சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூகபாதுகாப்பை வழங்கவும் தமிழக அரசால் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இலுப்பூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் வழங்கப்பட்டுள்ளது.  இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பதிவு பெற்ற 11,627 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் துண்டும், 26,315 பெண் தொழிலாளர்களுக்கு சேலையும் வழங்கப்படுகிறது.

மேலும் கட்டுமான தொழிலாளா;களுக்கு புதுக்கோட்டை, குளத்தூர், இலுப்பூர், அறந்தாங்கி மற்றும் திருமயம் ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் விலையில்லா வேட்டி, துண்டு மற்றும் சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று ஏற்கனவே 37,942 கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், எண்ணை ஊராட்சி, மேலப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய நிரந்தரக் கட்டடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னதம்பி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராஜு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளர் அரசு, அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ராமசாமி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top