logo
 புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் இயங்கி வரும் தொண்டைமான் மாளிகை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை:  திமுக வேட்பாளர் முத்துராஜா  வாக்குறுதி

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் இயங்கி வரும் தொண்டைமான் மாளிகை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் முத்துராஜா வாக்குறுதி

01/Apr/2021 10:48:49

புதுக்கோட்டை, ஏப்ரல்:  புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்களின் சிறப்பை போற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் இயங்கி வரும் புதிய அரண்மனையை  நினைவுச் சின்னமாக அறிவித்து சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என திமுக வேட்பாளர் டாக்டர் முத்து ராஜா உறுதியளித்தார்.

புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில்  வியாழக்கிழமை பிரசாரம் செய்து  திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா கூறியதாவது: 

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டையை கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் 1974 -இல் தனியாக பிரித்து புதுக்கோட்டையை தனி மாவட்டமாக  உருவாக்கினார். 

புதுக்கோட்டையில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் பாரம்பரியமான இடங்கள்  சிற்பக் கலைக்கு பெயர் போன ஆவுடையார் கோயில், குடுமியான்மலை, ஓவியக் கலையை பறைசாற்றும் சித்தன்னவாசல், வீர வரலாறை கம்பீரத்தை உணர்த்தும் திருமயம் கோட்டை,  சோழ மன்னர்களின் சிற்பக்கலையை போற்றும் விஜயாலய சோழீஸ்வரம், கொடும்பாளூர் மூவர் கோயில் என பாரம்பரிய பெருமைகளைச் சொல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட கோயில்கள் வரலாற்றுச்சின்னங்கள் தொல்பொருள் துறையினரால்  பாதுகாக்கப்பட்டு வருகிறது 

 பழம்பெருமை கொண்ட வரலாற்று சின்னங்கள் கோவில்கள் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை நமக்கு விட்டுச்சென்ற இந்த மண்ணை ஆண்ட தொண்டைமான் மன்னர்களை கௌரவப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை  ஆட்சியர்  அலுவலகம் இயங்கி வரும்  புதிய( தொண்டைமான் மாளிகை) அரண்மனையை  வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்து தொண்டைமான் மன்னர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் புகைப்படங்கள் வரலாற்றுச் சுவடுகளை கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாக அறிவிக்க  அனைத்து  நடவடிக்கை மேற்கொள்வேன்.

மேலும் இங்கு உள்ள சுற்றுலா தலங்கள் வளர்ச்சி காணும் வகையில் அனைத்து இடங்களை யும் ஒருங்கிணைத்து உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச ஒருங்கி ணைந்த சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வழிவகை காண முயற்சி மேற்கொள்வேன் என்றார்  திமுக வேட்பாளர் முத்துராஜா.

பிற்பகலில்  ஆதனக்கோட்டை பகுதியில் உள்ள 8 ஊராட்சிகளிலும் வாக்கு சேகரித்தார். இதில், திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் உ்ள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு  உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

Top