logo
ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: முதல்வர் பழனிசாமி பேச்சு

ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: முதல்வர் பழனிசாமி பேச்சு

01/Apr/2021 10:08:46

ஈரோடு, ஏப்ரல்:  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

ஈரோடு  மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து மேலும் அவர் பேசியதாவது: 

கொங்கு மண்டலத்தில் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் பொய்யான, அவதூறான பிரசாரத்தை செய்து வருகிறார். அதிமுக வலிமையான இயக்கம். உயிரோட் டமான இயக்கம். எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது. கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுக கோட்டையாக இருக்க வேண்டும்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நான் முதல்வராக தேர்வு பெற்று, ஆளுநர் உத்தரவுப்படி, சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிருபிக்க முயற்சித்தேன். அப்போது,  திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்எல்ஏ-க்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். டேபிள் மீது ஏறி நடனமாடினர். ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் புத்தகங்களை வீசி எறிந்தனர். புனித மான சட்டப்பேரவையிலேயே அராஜகம்செய்த திமுகவினர் கையில் நாட்டைக் கொடுத்தால், என்ன செய்வார்கள்.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவமானப்படுத் தப்பட்டனர். பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவிடம் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.  திமுக எம்.பி. ஆ. ராசா, தயாநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை, தலைவர்களை தரக்குறை வாக பேசுகின்றனர். 

இவர்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா. அராஜக கட்சியான திமுகவிற்கு  இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கு கிறது.  இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஜாதி, மத சண்டை இல்லை. 

ஊர், ஊராகச் சென்று மனுக்களை வாங்கி ஸ்டாலின் ஏமாற்று வேலை செய்கிறார்.  கவர்ச்சிகரமாக பேசி, குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது.  எந்த குறையாக இருந்தாலும் முதல்வர் உதவி மைய எண்ணுக்கு (1100) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் திட்டத்தை நான் கொண்டு வந்தேன். இது வரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  இனிமேல் மனு வாங்கி ஏமாற்ற முடியாது.

அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் பொய்யான கருத்தை கூறி வருகிறார். டெண்டர் விடப்படாத, நடக்காத திட்டத்தில் ஊழல் நடந்ததாக என்மீது ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து  இங்கே மேடை போட்டு நேருக்குநேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவர். அதேபோல்,  திமுக ஆட்சியில் நடந்த தவறுக்கு ஸ்டாலின் பதில் சோல்ல வேண்டும்.  எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும். 


ஈரோடு மாவட்டத்தில் 61 அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த 29 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த அவிநாசி- அத்திக்கடவு திட்டம், நொய்யல் ஆறு சீரமைப்பு,  காலிங்கராயன், கொடிவேரி, கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு என பல பணிகள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி. 


Top