27/Sep/2020 09:40:54
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அறிகுறி இல்லாமல் வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதைப்போல் சமூக இடைவேளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இதை ஒரு சிலர் கண்டு கொள்வதில்லை. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபராதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி முக கவசம் அணியாமல் வந்தால் ரூ. 200 - ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ 500, கடைகள் வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை என்றால் ரூ 5,000 அபராதம் என உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் வருவாய் துறையினர் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மாநகர் பகுதியில் மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதேபோல், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மேலும் கடைகள் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அபராதம் விதித்து வந்தனர். இதுவரை மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 12 கடைகளுக்கு தலா 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் முக கவசம், பொது இடங்களில் எச்சில் துப்புவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கிடைக்காத என மொத்தம் ரூ .6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்