logo
சாலை விரிவாக்கப்பணிகள்: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

சாலை விரிவாக்கப்பணிகள்: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

17/Jul/2021 04:33:54


ஈரோடு, ஜூலை:சாலை விரிவாக்கப்பணிகளுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் ஒரு பகுதி அரசு தலைமை மருத்துவமனையை ஒட்டி அமைந்து உள்ளதால் அப்பாதை மிக குறுகிய நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இதனால் அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், எஸ்.கே.சி  சாலையை விரிவுபடுத்துவது தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சாலையை அகலப்படுத்தும் போது மருத்துவமனை வளாகம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேலும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தை மாற்றி அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள்உடனிருந்தனர்.


Top