logo
பெருந்துறை இன்டேன் ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு சேமிக்க வசதி

பெருந்துறை இன்டேன் ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு சேமிக்க வசதி

09/Jan/2021 07:23:18

ஈரோடு, ஜன: பெருந்துறை இன்டேன் சமையல் எரிவாயு உருளை ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயு சேமிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது என இந்த ஆலையின் தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் நிறுவனத்துக்கு தமிழகத்தில் 1.60 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 57.7 சதவீத சமையல் எரிவாயு சந்தையை இன்டேன் பெற்றுள்ளது.

 ஈரோட்டில் இன்டேன் எரிவாயு நிரப்பும் ஆலை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 60.93 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலையின் மொத்த கொள்ளளவு 1,850 மெட்ரிக் டன். இங்கு தினமும் 34,000 சமையல் எரிவாயு உருளைகளில் எரிவாயு நிரப்பப்படுகிறது.  இதன் மூலம் இங்கு ஆண்டுக்கு 1.20  லட்சம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

 இந்த ஆலையின் கொள் திறனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு மேலும் 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயுவை சேமிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த சேமிப் புக் கலன்கள் விரைவில் செயல்பட தொடங்கும்.

 இப்போது ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 125 இன்டேன் எல்பிஜி விநியோகஸ்தர்கள் மூலம் சமையல் எரிவாயு உருளைகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இப்போதுள்ள நிலையில் ஆலையில் 3 நாள்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும். கூடுதல் சேமிப்புக் கலன்கள் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக 3 நாள்களுக்கு தேவையான சமையல் எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும்.

 இந்த ஆலையில் 5 கிலோ, 14.2 கிலோ அளவுகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளும், 19 கிலோ, 47.5 கிலோ அளவுக்கு வர்த்தக பயன்பாட்டுக்கான உருளைகளிலும் எரிவாயு நிரப்பப்படுகிறது. இங்கு 425 கிலோ கொள்ளவுக்கு உருளையில் எரிவாயு நிரப்ப கட்டமைப் பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு வணிக பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

 இதனைத்தொடர்ந்து ஆலை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.  இந்த நிகழ்வில் இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டல தொடர்பு மேலாளர் ராஜசேகர் ராஜாராம்,  இன்டேன் எல்.பி.ஜி.ஈரோடு மண்டல மேலாளர் சுகன்யா மற்றும் ஆலை அலுலர்கள் பங்கேற்றனர்.

Top