logo
அதிகரிக்கும்  கொரோனா பரவல்:  பாதுகாப்பு விதிமுறைகளை கண்டுகொள்ளாத தேர்தல் பிரசாரக் களம்

அதிகரிக்கும் கொரோனா பரவல்: பாதுகாப்பு விதிமுறைகளை கண்டுகொள்ளாத தேர்தல் பிரசாரக் களம்

15/Mar/2021 08:33:43



தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஏப்.6-இல் நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளிலும், வேட்பு மனு தாக்கல் இம்மாதம், 12-ஆம் தேதி தொடங்கியுள்ளது. தமிழகத்தில், கடந்த மாதம் வரை, கொரோனா நோய் பரவல், படிப்படியாக குறைந்து போனது. ஆனால், தேர்தல் பரப்புரை  காரணமாக கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியைடயச்செய்துள்ளது.

நோய் பரவலை தடுக்க, மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.பொதுக்கூட்டம் நடத்த, சமூக இடைவெளியை விட்டு, எவ்வளவு பேர் அமர அனுமதி அளிக்கலாம் என்பதை  மாவட்ட ஆட்சியர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீர்மானிக்க  வேண்டும்.

மனு தாக்கலின்போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்குள், இரண்டு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மனு தாக்கல் செய்ய வருவோருக்கு, முன் கூட்டியே, குறிப்பிட்ட நேரத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒதுக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மேலும், முதல் முறையாக வேட்பு மனு தாக்கலுக்கான கட்டணத்தை, இணையதளம் வழியே செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்கு, 5 பேர் மட்டும் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பிரசார கூட்டங்களில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது எதையும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கவில்லை. நேற்று முன்தினம் மனு தாக்கலின்போது, வேட்பாளருடன் பலர் சென்றனர். தேர்தல் பிரசார கூட்டம் எதிலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை. சிலர் முக கவசத்தை தாடையில்  தொங்க விட்டுள்ளனர்.

கொரோனா விதிமுறைகள் எதையும், அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை. அதை பின்பற்ற செய்ய வேண்டிய, தேர்தல் ஆணையமும்  பாராமுகமாகவே உள்ளது.இது குறித்து, தேர்தல் அதிகாரிகளை கேட்டால், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

சுகாதாரத் துறை அதிகாரிகளை கேட்டால், அரசியல்வாதிகள் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். அவர்கள் பிரசாரம்தான் முக்கியம் எனக்கருதி, விதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர். நடவடிக்கை எடுப்பதென்றால், எத்தனை ஆயிரம்  பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்  என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரம் என்ற பெயரில், கொரோனா விதிமுறைகளை மீறி வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலும் அதிகரிக்க துவங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.  

இதைப் போல  பிற மாவட்டங்களிலும்  கட்டுப்படுகளை கடுமையாகக் கடைப்பிடிக் காவிட்டால்  பொதுமக்கள்  மாபெரும் சிக்கல்களை மீண்டும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.இதை அதிகாரிகள் உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக உள்ளது.

இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, அனைத்து கட்சிகளுக் கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது, மாநில அரசு அறிவித்துள்ளபடி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அவர்.


Top