logo
தேனி புறவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் தொடர்கதையான சாலை விபத்துகள்

தேனி புறவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் தொடர்கதையான சாலை விபத்துகள்

14/Mar/2021 07:15:53

தேனி  புறவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படாததால்  சாலைவிபத்தில் பயணிகள் பலியாகும் அவலம் தொடர்வதாக அப்பகுதி மக்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் தேனியை தலைமையிடமாக கொண்டு கடந்த 1997-ஆம் ஆண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனியை தலைநகராக  மாறியதால் ஆட்சியர், எஸ்பி அலுவலகம் உள்பட பல்துறை அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக அரசுப்பணி, தனியார் துறை பணி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தேனிக்கு நாள்தோறும் குடிபெயர்ந்து வருகின்றனர்.

  இதன் காரணமாக  தேனியில் மக்கள்தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. எனவே, நகருக்குள்  சரக்கு போக்குவரத்து வாகனங்கள் வருவதை தடுக்க தேனி நகரில் அன்னஞ்சி பிரிவு முதல் தேனி நகர்- மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. 

இச்சாலையில் தற்போது தேனி நகருக்கான புதிய பஸ்நிலையம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையம் வரும் வரை பைபாஸ் சாலையில் வாகன போக்குவரத்தானது மிகக்குறைவாகவே இருந்து வந்தது. புதிய பேருந்து நிலையம் அமைந்த பிறகு, இந்த பைபாஸ் சாலையில் சென்று வரக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன்காரணமாக சுமார் 7 மீட்டர் சாலையாக இருந்த இச்சாலை 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. 10 மீட்டர் சாலையாக மாற்றிய பிறகும் கூட  அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்தும்  கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச்செல்லும் போது, சாலையின் இடதுபுறம் ஒதுங்கி செல்ல வசதியாக சாலையை 13 மீட்டர் சாலையாக அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த புறவழிச் சாலையில்  20 மீட்டர் அகலத்திற்கு இருபுறமும் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் உள்ளதால் விரிவாக்கம் செய்யும் முயற்சி தொய்வடைந்தது.  தற்போது வாகனபோக்குவரத்து அதிகரித்ததால் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் குறுகிய சாலையில் பயணித்து விபத்துக்களில் சிக்கி 5 பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாகன விபத்தை தவிர்க்க உடனடியாக சாலையை 13 மீட்டர் சாலையாக அகலப்படுத்த வேண்டும் என சமூகஅமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையும் அன்னஞ்சி பிரிவில் இருந்து துவங்கி 4 கிமீ தொலைவிற்கு சாலையை 13 மீட்டர் சாலையாக அகலப்படுத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பணியை துவக்கியது.

இதில் அன்னஞ்சியில் இருந்து சுமார் 2வது கிமீ தொலைவில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் துவங்குகிறது. எனவே, இந்த 2வது கிமீ தொலைவில் இருந்து சாலையை 10 மீட்டர் அகலத்தில் இருந்து 13 மீட்டர் சாலையாக விரிவுபடுத்த வனத்துறை அனுமதிக்கவில்லை.

20 மீட்டர் அகல சாலைக்கான உரிமை உள்ளதற்கான எல்லைக்கற்கள் 4 கிமீ தொலை விற்கும் நடப்பட்டுள்ள நிலையில் சாலையை விரிவுபடுத்த வனத்துறை தொடர்ந்து தடைவிதிப்பதால் அன்னஞ்சி விலக்கில் இருந்து 2-ஆவது கிமீக்கு அடுத்து 13 மீட்டர் சாலை போடமுடியாமல் குறுகிய சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனஓட்டுனர்கள் தனியாக வரும்போதும், குடும்பத்துடன் பயணிக்கும் போதும் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்தில் வனத்துறையால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்வது வருத்தமளிப்பதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Top