logo
பொதுமக்களிடையே கோவிட் தடுப்பூசியின் நன்மை தொடர்பான  விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: அமைச்சர் ரகுபதி பேச்சு

பொதுமக்களிடையே கோவிட் தடுப்பூசியின் நன்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: அமைச்சர் ரகுபதி பேச்சு

19/Jun/2021 08:33:19

புதுக்கோட்டை, ஜூன்:கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு தற்போது பொதுமக்களி டையே அதிகரித்துள்ளதாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வழங்கி, தடுப்பூசி முகாம்களை எஸ்.ரகுபதி (19.6.2021)  சனிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர்  அமைச்சர்  மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெக்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் கட்டமாக கோவிட் நிவாரணத் தொகை ரூ.2,000 மற்றும்  14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில் அடப்பகாரசத்திரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்குமுதலமைச்சர் அவர்கள் அறிவித்த கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும்  14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமையாகும். அந்தவகையில் பொதுமக்களின்  தேவையை உணர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் இதயத்தில் நிரந்தரமாக இருப்பதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்களில் எவ்வித விளம்பரமுமின்றி எளிமையாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே தற்பொழுது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தினமும் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். எனவே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமுடன் முன்வர வேண்டும். கோவிட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

முன்னதாக ,புதுக்கோட்டை நகராட்சி, நாடார் மண்டபம், கீழ 7-ஆம் வீதி மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியம், ஊனையூர் மற்றும் குளத்துப்பட்டியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்ககுரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி,

வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, பொது சுகதார துணை இயக்குநர் கலைவாணி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதா, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு () சிதம்பரம், நைனாமுகமது, வீரமணி, பாலு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Top