logo
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 103 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 103 பேருக்கு கொரோனா தொற்று

08/Mar/2021 03:53:57

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 103 பேர்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைய தொடங்கியது. இதன் காரணமாக நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. 

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதன்  காரணமாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதித்தவர்கள் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 1600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தினசரி  10 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டை பொறுத்தவரை பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் மக்கள் வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரும் பழக்கம் குறைந்துள்ளது.

பொது இடங்களிலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகிவிட்டது. இதுபோன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் தொற்று அதிகரித்துவிடக்கூடாது என்பதில் சுகாதாரத்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

 ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால்103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கடந்த 10 நாட்களில் நோய் தொற்றிலிருந்து  139 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

 சுகாதாரத்துறையினர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 874 ஆக உயர்ந்தது.

ஒரே நாளில் 7 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 642 ஆக உயர்ந்தது. கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 82 மட்டுமே பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Top