logo
 கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின்  வேட்பாளராக எம்.சின்னதுரை போட்டி.

கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எம்.சின்னதுரை போட்டி.

14/Mar/2021 10:56:47

புதுக்கோட்டை,மார்ச்:  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை களமிறங்குகிறார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை(54) தேர்வு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை மாலை அறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளம் கிராமத்தில் கடந்த 9.4.1967-இல் பிறந்த சின்னதுரைக்கு தற்பொழுது 54 வயதாகிறது. 1987-ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த சின்னதுரை கட்சியின் புனல்குளம் கிளைச் செயலாளர், கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்பொழுது தொடர்ச்சியாக 17 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

சமூக நல்லிணக்கத்திற்காக ஏராளமான போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில்  பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். வேட்பாளர் சின்னதுரைக்கு ராஜாத்தி என்ற மனைவியும் இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.


Top