logo
உலக மகளிர் நாள்: வைகோ வாழ்த்து

உலக மகளிர் நாள்: வைகோ வாழ்த்து

08/Mar/2021 12:05:11

மார்ச் 8. உலகம் முழுமையும், மகளிரின் உரிமை எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகின்ற நிலையில், தமிழக மகளிருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 


மகளிரின் உடல் அமைப்பைக் கொண்டு, அவர்கள் மென்மையானவர்கள் என்று கூறுவோர் உண்டு. ஆனால், வன்மையில் எல்லாம் வன்மையாகத் திகழ்கின்றவர்கள் பெண்கள். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், 

எங்கெங்கு காணினும் சக்தியடா 

ஏழு கடல் அவள் வண்ணமடா

அங்கு தங்கும் வெளியினில் கோடி அண்டம்

தாயின் கைப்பந்தெனவே ஓடுமடா -என்றார். பெண் அடிமை தீரும் மட்டும், வாழும் திருநாட்டின் மண் அடிமை தீருதல் முயற்கொம்பே என்றார். 

புரட்சிக் கவிஞன் பாரதி, பெண்களை, பெண் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி, சாதிகள் இல்லையடி பாப்பா என்று, ஆழமான சமூகக் கருத்துகளை பெண் குழந்தைகளின் மனதில் விதைத்தார். சமூக எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு என்பது, மறைக்கவோ, மறுக்கவோ முடியாத ஒன்று ஆகும். பண் ஏன் அடிமை ஆனாள் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடை காணும் வகையில், மகளிர் தங்களை விடுவித்துக் கொள்ள எத்தகைய முயற்சிகளில், பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதைக் காட்டியவர் தந்தை பெரியார். பெரியார் என்கின்ற பட்டத்தை அய்யாவுக்கு வழங்கியவர்களும் பெண்கள்தான். 

 இந்திய அளவில், தமிழக மகளிர் முதன்மை இடத்தில் சாதனை படைத்து வருவதற்கு, திராவிட இயக்கம் அடித்தளம் அமைத்துத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் நிறுவிய அடையாறு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்தை, டாக்டர் சாந்தா அவர்கள் சீரும் சிறப்புமாக வழிநடத்திப் பெருமை சேர்த்து இருக்கின்றார்.


உலகில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தோர்களுள், இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்ற மேடம் கியூரி, ஹெலன் கெல்லர் ஆகியோர், உலக மனித உரிமைகள் ஆவணத்தை வரைந்த எலெனார் ரூஸ்வெல்ட் போன்றோர், முதன்மை முன்னோடிகளாகத் திகழ்கின்றனர். 

அந்த வரிசையில், இந்தியாவில் இந்திரா காந்தி, பிலிப்பைன்சில் கொரசான் அகினோ, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, இந்தோனேசியாவில் மேகவதி என ஆசிய நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் பெரும் புரட்சி செய்தார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில், பெண்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்கள். ஜெர்மனி சான்சலராக ஆங்கெலா மெர்கல், 18 ஆண்டுகளாக, வலிமை வாய்ந்த ஆளுமையாகத் திகழ்கின்றார். மகளிர் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், அயராது  தளராது நாளும் உழைப்போம் என சூளுரை மேற்கொள்வோம். 


                                                   


Top