logo
களப்பணியில் ஈடுபட்ட மதர்தெரசா வேளாண்கல்லூரி மாணவிகளை பாராட்டிய விவசாயிகள்.

களப்பணியில் ஈடுபட்ட மதர்தெரசா வேளாண்கல்லூரி மாணவிகளை பாராட்டிய விவசாயிகள்.

05/Mar/2021 11:33:44

இலுப்பூர்,மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் பகுதியில் களப்பணியில் ஈடுபட்ட மதர்தெரசா வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மதர் தெரசா வேளாண் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு பயிலும்  11  மாணவிகள் கொண்ட குழுவினர்   கிராம தங்கல் திட்டத்தில்  கீழக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

பிப்ரவரி 20 -இல் தங்களது களப்பணியை கீழக்குறிச்சியில் தொடங்கிய மாணவிகள்   சிறு நாடகத்தின் மூலம்  கிராம தங்கல் திட்டத்தினை பற்றி  மக்களுக்கு  விளக்கினர். நாடகத்தின் இறுதியில் உயிரிஉரங்களை பற்றிய விழிப்புணர்வை அங்குள்ள விவசாயிகளிடம் வலியுறுத்தியதுடன்  அதனை இலவசமாகவும் வழங்கினர். பின்னர்   சமுதாயக்கூட வளாகத்தில்  மரக்கன்றுகளை  நட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்குறிச்சி விவசாய நிலங்களுக்கு சென்று திருந்திய நெல்சாகுபடி முறை பற்றியும்,தண்டுத் துளைப்பான் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விளக்கினர்.பின்னர் கல்லிச்சிவயல் பகுதியில் உயிரி உரத்தை பயன்படுத்தி நாற்றங்காலில் வேர் நேர்த்தி செய்யும் முறை பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் அங்குள்ள விவசாயிகளிடம்  விளக்கினர்.

 மேலும்  கீழக்குறிச்சி கிராமத்தின் விவசாயிகளின்  நிலத்தில்  தென்னையில் வேரூட்டம்  மற்றும் வாழையில் வேர் உறிஞ்சும் சிகிச்சைப் பற்றியும் ஐந்திலைக் கரைசல்  மற்றும் அமிர்தக் கரைசல் தயாரிக்கும் முறை பற்றியும் செயல்விளக்கம் அளித்தனர். வரும் மார்ச் 13 வரை கீழக்குறிச்சி கிராமத்தில்  களப்பணி ஆற்றி வரும் மதர்தெரசா  வேளாண்கல்லூரி இறுதியாண்டு மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் பாராட்டினர்.

Top