logo
தொற்று அபாயம்: கொரோனா நோயாளிகள் மருத்துவமனை செல்ல  பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

தொற்று அபாயம்: கொரோனா நோயாளிகள் மருத்துவமனை செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

26/Apr/2021 07:36:06

புதுக்கோட்டை, ஏப்:  கொரோனா நோயாளிகளை அவரவர்  வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல  108 ஆம்புலன்ஸ்  வாகனங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும். மாறாக  சொந்த, வாடகை வாகனங்கள்,   பேருந்து, ரயில்கள் போன்ற பொதுப்போக்குவரத்தை  பயன்படுத்தி கொரோனா பரவலுக்கு வழிவகுக்க  வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் அரசு மற்றும் தனியார; மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை அவரவர்  வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கு காலதாமதமின்றி அழைத்துச் செல்ல வட்டாரத்திற்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் வீதம் 13 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஆய்வக பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி மூலம்  நோயாளிக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கும் தகவல் அளிக்கப்படும். நோயாளிகள் தங்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் வரும் வரை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன் நோயாளிகள் அவசரப்பட்டு தங்களுக்கு சொந்தமான வாகனங்களிலோ அல்லது பேருந்து , ஆட்டோ, ரயில், டாக்சி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களிலோ உறவினர்களின் துணையுடன் மருத்துவமனைக்கு சென்று   கொரோனா  பரவலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பில்லாத மற்றவர்கள் சேர்ந்து பயணம் செய்வதால் கொரோனா தொற்று ஏற்பட 100 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் இவ்விசயத்தில் மிகவும் கவனமாக இருந்து 108 ஆம்புலன்ல் வாகனத்தில்  மட்டுமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள்..

Top