logo
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

22/Feb/2021 11:08:25

புதுக்கோட்டை, பிப்: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவ தைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டு ரூ.10 லட்சம் பணப்பயன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா பேசினர். போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் வி.மலர்விழி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.பச்சையம்மாள் மற்றும் நிர்வாகிகள் த.பத்மா, தனலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.

போலீசார் அத்துமீறியதாக புகார்:

தொடர் போராட்டத்தை முன்னிட்டு ஊழியர்கள் உட்காருவதற்காகப் போடப்பட்டிந்த சாமியானா பந்தலைக் கிழித்தெறிந்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்து முழக்கமிட்டதோடு கொளுத்தும் வெளியிலேயே அமர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்;.

Top