logo
ஈரோட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்

ஈரோட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்

17/Feb/2021 06:18:47

 ஈரோடு, பிப்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சேலம் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பிப்.17  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

வருவாய்த் துறையினர் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் சட்டமன்ற தேர்தல் நடத்தும் பணி , பேரிடர் மேலாண்மை பணி  உள்பட பல்வேறு முக்கிய பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 வருவாய் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு  வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி  ஆணை வெளியிட வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 390 வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகம், ஆட்சியர்  அலுவலகத்தில் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதைப்போல் மாவட்டம் முழுவதும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                                   

Top