logo
கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த வ.உ. சி நீச்சல் குளத்தை திறக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த வ.உ. சி நீச்சல் குளத்தை திறக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

13/Dec/2020 08:19:09

ஈரோடு- டிச: கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொழுதுபோக்கு பூங்கா, நீச்சல் குளம் போன்றவற்றுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா  தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து படிப்படியாக ஒவ்வொரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலாத்தலங்கள் பூங்கா போன்றவை மூடப்பட்டது. தற்போது தாக்கம் குறையத் தொடங்கி வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

ஈரோடு வ.உ .சி பூங்கா பகுதியில் அரசு நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு தனியாக கட்டணத்துடன் பயிற்சியும், பொதுமக்களுக்கு தனியாக கட்டணத்துடன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் நீச்சல் குளம் மூடப்பட்டது. இதையடுத்து குளத்தில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

 இதுவரை 9 மாதங்களாக நீச்சல் குளம் மூடப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் படிப்படியாக சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நீச்சல் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்காக நீச்சல் குளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஈரோடு வ.உ. சி பூங்கா பகுதியில் உள்ள அரசு நீச்சல் குளத்தை  தயார்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. எந்த தேதியில் திறக்கப்படும் என்று இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

எனினும், ஊழியர்கள் நீச்சல் குளத்தை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் வெளியேற்றப் பட்டதால்  அந்த இடங்களில் இருந்த பாசிகள்அகற்றப்பட்டு வருகிறது. 8  மாதங்களாக தண்ணீர் இல்லாததால் டைல்ஸ் விரிசல் ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் குமார் கூறியதாவது: தற்போது நீச்சல் குளங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக நீச்சல் குளத்தை திறக்கலாம் என அரசு அனுமதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் மாணவர்கள் பயிற்சிக்காக நீச்சல் குளம் திறக்கப்படும் என்றார். 


Top