logo
நீட்தேர்வு விவகாரம்: நீதிபதி தலைமையிலான உயர்நிலைக்குழுவிடம் இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு

நீட்தேர்வு விவகாரம்: நீதிபதி தலைமையிலான உயர்நிலைக்குழுவிடம் இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு

22/Jun/2021 10:17:04

 

சென்னை,ஜூன்: நீட் தேர்வு விவகாரம் குறித்து இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ கருத்துகளைச் சமர்ப்பித்துள்ளதாக நீதிபதி .கே.ராஜன் தெரிவித்தார்.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் பலர் பாதிப்புக்குள்ளாவதால், நீட் தேர்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி .கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்று அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைக்  கேட்டுப் பெற அக்குழு முடிவு செய்தது. அதன்படி, மக்கள், தங்களது கருத்துகளை, ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நீதிபதி ராஜன் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் பட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர், நீதிபதி .கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வால் எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான தரவுகள திரட்டி வருகிறோம். முக்கியமான தரவுகள் வர வேண்டி உள்ளது. நீட் தேர்வு தாக்கம் குறித்து, 25 ஆயிரம் பேரிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும் மின்னஞ்சலில் தான் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், பெரும்பாலனோர், நீட் தேர்வு வேண்டாம் என தெரிவித்துள்ளனர். சிலர் நீட் தேர்வு வேண்டும் எனக் கூறியுள்ளனர். வெகு சிலர் மட்டும் இந்தாண்டும், அடுத்த இரண்டாண்டும் தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அதற்காக ஒவ்வொருவரும் தெரிவித்த காரணங்களும் வெவ்வேறாக உள்ளன. அனைத்து தரப்பிட மிருந்து கருத்துகள் வந்த பிறகு எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.

எங்களது குழுவினர் வார இறுதி நாள்களில் கூட பணியாற்றி வருகின்றனர். அரசாணைப்படி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். கூடுதல் அவகாசம் கேட்பதற்கான அவசியம் ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது. அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது. விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Top