03/Feb/2021 05:43:54
என்னுடைய திரைப்படங்களைப் பார்க்க விரும்ப மாட்டேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.
சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து சூர்யா நடிக்கும் இரு படங்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ஒரு படமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதையடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-ஆவது படம்.
இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் அண்மையில் வெளியான படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா என்கிற படத்திலும் சூர்யா நடித்துள்ளார். மணி ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கும் கதையை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகர் சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது: சில நேரங்களில் நான் நடித்த படத்தைப் பார்க்க விரும்ப மாட்டேன். 100 நாள்கள் கழித்து கூட என் படத்தைப் பார்த்திருக்கிறேன்.மக்களுக்குப் படம் பிடிக்கும்போது அதை நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் என்னுடைய தவறுகளைப் பெரிய மனத்துடன் பொருட்படுத்தவில்லை என எண்ணிக்கொள்வேன். அப்போது, அதை எனக்குப் பிடித்த படமாகக் கூறுவேன்.
என்னுடைய மனைவி ஜோதிகா, சகோதரர் கார்த்தியும் நடிகர்கள்தாம். ஆனால் அவர்கள் என்னைப் போல் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதில் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்களுடைய வேலையைப் பிடித்து செய்வார்கள்.
சில சமயம் என் படங்களை நான் மிகவும் விமர்சனம் செய்வேன். என்னுடைய திறமையைச் சரியாக வெளிப்படுத்தவில்லை, இன்னும் உழைக்க வேண்டும் என்று எண்ணுவேன். என் பணிகளில் நான் கண்டிப்புடன் இருப்பேன். நான் இப்படித்தான். நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவேன்.
என்னுடைய படங்களின் ஹிந்தி ரீமேக்கில் நானே நடிக்க விரும்பமாட்டேன். ஹிந்தி எனக்கு எளிதானதல்ல. இன்னொரு மொழியைப் பேசுவது கொஞ்சம் கஷ்டமானது. தேவைப்பட்டால் நிச்சயம் பாலிவுட்டில் நான் நடிப்பேன் என்றார்.