logo
விடுதலை ஆவதற்குள் கிளம்பும்  விவாதங்கள்:  அதிமுகவில் மீண்டும் சசிகலாவா

விடுதலை ஆவதற்குள் கிளம்பும் விவாதங்கள்: அதிமுகவில் மீண்டும் சசிகலாவா

17/Jan/2021 08:24:35

சென்னை:  பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க.வில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமாடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

கே.பி.முனுசாமி போன்ற மூத்த நிர்வாகிகள் சகிகலா வெளியே வந்தாலும் கட்சியில் எந்த பிரச்சினையும் வராது. அவர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசிவருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள்ளும் சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் எழ தொடங்கி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா சசிகலாவை புகழ்ந்தார். அவர் பேசும்போது, ஜெயலலிதாவுடன் தவ வாழ்வு வாழ்ந்தவர் சசிகலா. அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஆவேசமாக பேசினார்.அவரது இந்த கருத்து அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கோகுல இந்திராவின் இந்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் காட்டமாகவே பதில் கொடுத்தார். அவர் கூறியதாவது:

கோகுல இந்திரா உள்பட யாராக இருந்தாலும் சரி கட்சிக்குள் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது நல்ல தல்ல. சசிகலாவை ஒருபோதும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது என்று திட்டவட்டமாக பேசினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:அதிமுக -அமமுகவுக்கு இடையில் நடப்பது தாய் இல்லாத நேரத்தில் நடக்கும் அண்ணன்-தம்பி பங்காளி சண்டைதான். சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அதிமுக.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைப்பார்கள். இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் சசிகலாவை தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே நிலவுவது அண்ணன் தம்பி பிரச்னை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற அமமுகவுடன் அண்ணன்- தம்பியாக இருக்க முடியாது. அமமுக --வுடன் நமக்கு எந்த உறவும் இல்லை என்றார்.

எனினும், அதிமுகவுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி திமுக.வை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளது. தேசியத்தை விரும்புகிறவர்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் குருமூர்த்தி இவ்வாறு பேசி இருப்பது அதிமுக-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.ஏற்கெனவே அதிமுக-வை பாஜக இயக்குவதாக கூறப்படுவதும் நெருக்கடியான காலகட்டங்களில் பாஜக ஆலோசனையை அதிமுக ஏற்றுக்கொண்டே வந்துள்ளது. தற்போது அதிமுக. பிளவுபட்டு வலிமை இழக்கக் கூடாது என்று பாஜக விரும்புவதாக மேல்மட்ட தலைவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சூழலில் குருமூர்த்தியின் இந்த பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கருத்தை அதிமுக. ஏற்குமா என்பது போக போகத்தான் தெரியும்.

Top