logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் நகல் எரிப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் நகல் எரிப்புப் போராட்டம்

14/Jan/2021 06:14:03

புதுக்கோட்டை, ஜன: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெற்றது.


மத்திய ஆரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த போதும் சட்டத்தை முழுமையாக ரத்துசெய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை போகிப் பண்டிகை நடைபெற்றது. இப்பண்டிகையில் வீட்டுக்கு வேண்டாத பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். அதே போல நாட்டுக்குத் தேவையில்லாத இந்தச் சட்டத்தை பழைய பொருட்களோடு தீயிட்டுக்கொளுத்தும் இயக்கம் நடைபெற்றது.

இப்போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. திருமயத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடியை அடுத்த தீத்தான்விடுதியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி பங்கேற்றார்.

Top