logo
புதுக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவு: கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவு: கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

15/Mar/2021 10:05:55

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை  மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு  கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.உமாமகேஸ்வரி  தொடக்கி வைத்தார்.

இது குறித்து  தேர்தல் நடத்தும் அலுவலர் மேலும் கூறியதாவது: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 6.4.2021 -இல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை  உறுதிசெய்யும்  நோக்கில்  வாக்காளர்களிடையே உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் மகளிர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும்  நடத்தப்பட்டது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய  பேரணி புதிய பேருந்து நிலையம், அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியரகத்தில் முடிவுற்றது. இதில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டனர்.


இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பேரணிகள், மனித சங்கிலி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்று தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டியினை பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா,  வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top