logo
மறைந்த பேராசிரியர் அன்பழகன் 98-ஆவது பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் மரியாதை - கல்லூரி மாணவிகளுக்கு உதவி

மறைந்த பேராசிரியர் அன்பழகன் 98-ஆவது பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் மரியாதை - கல்லூரி மாணவிகளுக்கு உதவி

20/Dec/2020 10:13:53

சென்னை: திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 98-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னை, கீழ்பாக்கம் கார்டனில் உள்ள பேராசிரியரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். 100 கல்லூரி மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார் மு.க ஸ்டாலின்.

அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, அயனாவரத்தில் உள்ள டபிள்யூ.பி.சௌந்தராஜன் மேல்நிலைப் பள்ளியில் 100 கல்லூரி மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில், கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்.

 அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், பேராசிரியர் அவர்கள் பிறந்த தினம் இன்று. தலைவர் கலைஞர் அவர்களது உற்ற தோழராக, தனது கொள்கைகளிலிருந்து என்றும் வழுவாமல் இறுதிவரை கழகமே மூச்சாக வாழ்ந்தவர் என்று பதிவிட்டுள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கொண்ட கொள்கை- ஏற்றுக்கொண்ட தலைமை-இயக்கத்தில் உறுதியென இறுதி மூச்சு வரை இயங்கிய நம் இனமானப் பேராசிரியரின் 98 -ஆவது பிறந்த நாளில் அவரின் அரும்பணிகளை போற்றுவோம். இயக்கம் மக்களுக்காக பேசியது, இயக்கத்துக்காக பேசியவர் பேராசிரியர். அவர் வழியில் பயணித்து கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார். 

Top