07/Jan/2021 09:51:25
ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து 2 -வது நாளாக நேற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதைப்போல் தாளவாடி ,கொடிவேரி ,கொடுமுடி, வரட்டுப்பள்ளம், கவுந்தபாடி, குண்டேரிபள்ளம், சென்னிமலை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, பெருந்துறை உள்பட பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது. தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியான தொட்டகாஜனூர், அருள்வாடி, பனக் கள்ளி, தலமலை, ஆசனூர் கேர்மாளம் மற்றும் வனப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலை சிக்கள்ளி என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த கருவேல மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை அகற்ற வராததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மரத்தை அகற்றினர். இந்த பலத்த மழை காரணமாக தாளவாடி ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சத்தியமங்கலம் வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:நம்பியூர் - 60, தாளவாடி - 49, கொடிவேரி - 44, கொடுமுடி - 38.6, வரட்டுபள்ளம் - 27.6, கவுந்தப்பாடி - 25.4, குண்டேரிபள்ளம் -23.8, சென்னிமலை - 16, அம்மாபேட்டை - 13, சத்யமங்கலம் - 11, மொடக்குறிச்சி - 10, பெருந்துறை - 9, பவானிசாகர் - 7, பவானி - 6.6, ஈரோடு - 3