logo
ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி  6, 7 -இல்  தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 6, 7 -இல் தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம்

05/Jan/2021 11:05:10

ஈரோடு, ஜன: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  6,7 ஆகிய 2 நாள்கள்   ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு மாவட்டத்தில்  புதன்கிழமை (ஜன.6) மற்றும்  வியா ழக்கிழமை (ஜன.7) 2 நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதில் முதல் நாளான  புதன்கிழமை ஈரோடு மாவட்டம் பவானியில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள  பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று பேசுகிறார். 

அதையடுத்து காலை 10 மணிக்கு கே.எம்.பி. மகாலில் சிறு,குறு தொழில் முனைவோரிடம், காலை 11 மணிக்கு அந்தியூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பகல் 12 மணிக்கு வாரி மகாலில் வெற்றிலை கொடி விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பேசுகிறார்.

 மதியம் 1 மணிக்கு அத்தாணி, 1.30மணிக்கு கள்ளிப்பட்டி, 3.30 மணிக்கு நால் ரோடு, மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 4.45 மணிக்கு நல்லூர் ஈபிபி மகாலில் உள்ளூர் பிரமுகர்களுடன், 6.30 மணிக்கு பு.புளியம்பட்டி நகராட்சி காந்தி நகர் பகுதியிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

7 மணிக்கு நம்பியூர், இரவு 9 மணிக்கு கோபியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் பேச உள்ளார். வியாழக்கிழமை  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் காலை 9 மணிக்கு கட்சியினர், பொதுமக்களின் பிரம்மாண்ட வரவேற்பினை ஏற்று, 9.30 மணிக்கு ஈரோடு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இளைஞர்-இளம் பெண்கள் பாசறையினருடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று  பேசுகிறார். 

இதையடுத்து காலை 10 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோயிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மதியம் 12 மணிக்கு சித்தோடு, 12.30 மணிக்கு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தொழில் முனைவோர், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார். மதியம் 2.30மணிக்கு சாணார்பாளையம் அதையடுத்து ஊத்துக்குளி, 3.15 மணிக்கு சென்னிமலைக்கு சென்று அங்கு பேசுகிறார். 

பின்னர், மாலை 4 மணிக்கு ஓடாநிலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, மஞ்சள் விவசாயிகளுடன் நடக்கும் கூட்டத்தில் கருத்துக்களை கேட்கிறார். மாலை 4.45மணிக்கு சிவசக்தி திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல், 5.30 மணிக்கு அவல்பூந்துறை வரவேற்பு, 6.30 மணிக்கு பெருந்துறை ஸ்ரீ பிளஸ் மகாலில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களின் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று, இறுதியாக பெருந்துறையில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

 ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழிகாட்டுதல் படி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான கே.வி.ராமலிங்கம் , ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி. கருப்பணன் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏ-க்கள் தென்னரசு, தோப்பு வெங்கடாச்சலம், ராஜா என்ற ராஜகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் செய்துள்ளனர்.

Top