logo
புதுக்கோட்டையில் எம்.ஜனார்த்தனனின் - என் வயது 15 -புத்தக வெளியீட்டு விழா

புதுக்கோட்டையில் எம்.ஜனார்த்தனனின் - என் வயது 15 -புத்தக வெளியீட்டு விழா

12/Jan/2021 12:16:05

புதுக்கோட்டையைச் சார்ந்த சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சமூக சேவகருக்கான பட்டயப் படிப்பு மாணவர் எம். ஜனார்த்தனன் எழுதிய -என் வயது 15  என்ற நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.

 புதுக்கோட்டையில் உள்ள  தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற  விழாவிற்கு ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் (ஓய்வு) ஏ.வி.சி.சி  கணேசன் தலைமை வகித்தார். 

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் முனைவர்.. வைர.ந.தினரகரன் நூலை அறிமுகம் செய்து பேசுகையில், ஒரு புத்தகத்திற்கான கருத்துகளை தொகுத்து, வரிசைப்படுத்தி வாசகர்களின் கருத்துக்கு விருந்தளிக்கும் ஒரு மிகப் பெரிய பணியில், வெற்றி பெற பல தலைசிறந்த எழுத்தாளர்களே தடுமாறும் நிலையில்,  இன்னும் 18  வயது கூட நிரம்பாத ஜனார்த்தனன்  அந்தப்பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். 

தேசக்கடமை  என்ற முதல் தலைப்பில் தன் கருத்துகளை ஆரம்பிக்கும்  நூலாசிரியர் ஜனார்த்தன் அனைத்துத் தலைப்புக்களிலும் தனிமனிதன் ஒருவன் தனக்காகவும், தான் சார்ந்துள்ள சமூகத்திற்காகவும் செய்ய வேண்டிய அத்துணை கடமைகளையும் அழகாக தொகுத்துள்ளார். இந்த நல்ல இளைஞரின் திறமைகளை வெளிக்கொணர்ந்ததில் புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திராவின் பங்கு போற்றுதலுக்குரியது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தென்னிந்தியாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண்மணி என்ற பெருமைக்குரிய முனைவர்.கி.ராதாபாய் பங்கேற்று நூலை வெளியிட்டார்.   நூலுக்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர்  முல்லை வேந்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் க. சதாசிவம், நேரு இளையோர் மைய கணக்காளர்  ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நூலாசிரியர்  ஜனார்த்தனன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேஸ்குமார் நன்றி கூறினார். 


Top