logo
ஈரோடு மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது

04/Jan/2021 02:14:12

ஈரோடு, ஜன: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ. 2,500 ரொக்கமும். இத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக் கரும்பு, வெல்லம், முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.


அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 1144 ரேஷன் கடைகள் மூலம் ரொக்க பணம், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில்  7 லட்சத்து 10 ஆயிரத்து 966 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.25,00 ரொக்க பணமும், பொங்கல் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு சர்க்கரை கார்டு உள்ளவர்கள் அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் 33 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் இருந்தன. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சேர்த்துதான் 7 லட்சத்து 10 ஆயிரத்து 966 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையான ரூ.2500, பொங்கல் தொகுப்பும் வழங்கப்படுகிறது. 


ஏற்கெனவே இதற்கான டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. நாள் ஒன்றுக்கு காலை 100 பேரும் மாலை 100 பேரும் என்ற அளவிற்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.  கொரோனா தாக்கம் காரணமாக பொங்கல் பரிசுப் பொருட்கள் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மட்டம் அமைக்கப்பட்டு இருந்தது அதில் நின்று மக்கள் பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கே.வி .ரமலிங்கம் எம்.எல்.ஏ பொங்கல் பரிசுத் தொகையான ரூ.2,500 மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். 

இதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய அக்ரஹாரம் பகுதியில் கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தில் நடந்த விழாவில் கே எஸ் தென்னரசு எம்எல்ஏ கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். ஆர்டிஓ சைபுதீன் தாசில்தார் பரிமளா தேவி, பகுதி   செயலாளர்கள்         சூரம்பட்டி ஜெகதீசன் , கேசவமூர்த்தி, முருக சேகர், தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாணவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வரும் 13-ஆம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. எந்தெந்த தேதிகளில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது அந்தந்த தேதிகளில் மக்கள் ரேஷன் கடையில் வந்து பொங்கல் பரிசு தொகை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாளில் வரமுடியாதவர்கள் வரும் 13-ஆம் தேதி அன்று ரேஷன் கடையில் நேரடியாக சென்று பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தொகுப்பினை பெற்றுச் செல்லலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top