01/Jan/2021 08:39:29
சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை தொடங்கவுள்ள நிலையில், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்தாலும், பரிசோதனையை குறைக்கவில்லை. பரிசோதனையை குறைக்கக் கூடாது என்பதே அரசின் திட்டம். சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம்.
சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. 5 மாவட்டங்களிலுள்ள மொத்தம் 17 இடங்களில் ஒத்திகை நடைபெறும்.
பாதுகாப்பாக கவனமாக துல்லியமாக செய்யவேண்டிய விஷயம். எனவே சரியான திட்டமிடலுக்காக ஒத்திகை அவசியமாகிறது. கொரோனா தடுப்பூசி பணிக்காக சுகாதாரப் பணியாளர்கள் 21,170 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என நிர்ணயித்துள்ளோம். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 2 -ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.