logo
சத்தியமங்கலம் கொரோனா சிகிச்சை மையத்தில் படுக்கை வசதி  இல்லாமல் கொரோனா நோயாளிகள் தவிப்பு

சத்தியமங்கலம் கொரோனா சிகிச்சை மையத்தில் படுக்கை வசதி இல்லாமல் கொரோனா நோயாளிகள் தவிப்பு

05/Jun/2021 11:35:19

ஈரோடு ஜூன்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி மற்றும் போதிய உணவுவசதி இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதோடு சுகாதார துறையினர் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வரும் திங்கள் முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மீண்டும் ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நோய்தொற்று அதிகளவில் பாதித்துள்ள 11 மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் உள்ளடங்கியுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கும் படுக்கை வசதி குறைவாகவே உள்ளது எனவும் மீதம் உள்ள நோயாளிகளை பாய் கொடுத்து கீழே உறங்க வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் சரிவர வருவதில்லை எனவும் போதிய உணவு இல்லாமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளியில் கழிப்பறை வசதி சரிவர இல்லை என தெரிவிக்கும் பொதுமக்கள் கழிப்பறை சுத்தம் இல்லாமல் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top