logo
தமிழக சுற்றுச்சூழல் துறை ஊழல் துறையாக மாறிவிட்டது: கொமதேக  பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழக சுற்றுச்சூழல் துறை ஊழல் துறையாக மாறிவிட்டது: கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

28/Dec/2020 05:34:46

 ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நீர்வள ஆதாரங்களை நிறைவேற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் துரைராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

அதிமுக அரசு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தெரிவிக்க முடியாத சூழ்நிலையால் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்று குழப்பம் நிலவியதால் தான் கட்சி உறுப்பினர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அதிமுக அரசு கூட்டணி அமைத்ததால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தைத்தவிர பிற தொகுதிகளில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனின் சொந்த மாவட்டத்திலேயே கழிவு நீர் பவானி ஆற்றில் கலக்கும் அவல நிலை உள்ளது. பூனாட்சி பகுதியில் செயல்பட்டு வரும் குச்சி கிழங்கு மில்லில் இருந்து ஏராளமான கழிவுகள் அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கலப்பதால் அப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்படைந்து மக்கள் குடிநீருக்கே அன்றாடம் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை அவரது துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்றார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்கும். மேலும், தமிழக அரசு மேட்டூர் வலது கரை வாய்க்கால் திட்டம் மணியாச்சி பல திட்டம் வழுக்குப் பாறை திட்டம் வேத பாறை திட்டம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு அது அவர்களது விருப்பம். தேர்தல் வரும் பொழுது மக்கள் தான் அதை முடிவு செய்வார்கள் என்றார் ஈ.ஆர் ஈஸ்வரன். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் கணபதி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Top