logo
ரயான் நூல் விலை உயர்வைக் கண்டித்து: ஈரோட்டில் 5-ஆவது நாளாக நீடிக்கும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

ரயான் நூல் விலை உயர்வைக் கண்டித்து: ஈரோட்டில் 5-ஆவது நாளாக நீடிக்கும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

25/Dec/2020 09:55:51

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டத்தில் ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து 5-ஆவது நாளாக   50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 40 சதவீத இலவச வேட்டி, சேலைகள் ஈரோட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது.  இதனால் ராயன் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். நூல் விலை உயர்வால் தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 21-ஆம் தேதி முதல்  ரயான் துணி உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ளது.

 ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகபுரம், காளிங்கராயன்பாளையம் போன்ற பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ 40 கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது.

 இந்நிலையில்,  ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து மனு கொடுத்தனர். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்  வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விசைத்தறி தொழிலுக்கு அத்தியாவசிய தேவையான நூல்களின்  மூலப்பொருட்கள் விலை மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே  நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் நாங்கள் விளைவிக்கக்கூடிய நூல்களின் விலை சூழலுக்கு ஏற்ப அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளுக்கு சரியான விலை கிடைக்க மாதமொருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

Top