logo
மருந்துக் கடைகளில் மருந்தாளுநர்களே பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்

மருந்துக் கடைகளில் மருந்தாளுநர்களே பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்

23/Aug/2021 12:36:00

புதுக்கோட்டை, ஆக : அனைத்து மருந்துக்கடைகளிலும் மருந்தாளுநர்களே முழுநேரமாக பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுனர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.கார்த்திக்,  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம்  அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

பொதுவாக மருந்துக்கடைகள் திறக்க பதிவுற்ற மருந்தாளுநரின் சான்றிதழ் அவசியம். ஆனால், இத்தகைய சான்றிதழை பதிவுபெற்ற மருந்தாளுநர்களிடம் வாடகைக்கு பெற்றுக்கொண்டு பெரும்பாலான மருந்துக்கடைகள் இயங்குகின்றனர். முழு நேரமாக பணிபுரிய வேண்டிய பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் அங்கு இருப்பதில்லை.

மருந்துக் கடைகளில் பதிவுற்ற மருந்தாளுநர்களோ அல்லது அவர்களின் மேற்பார்வையிலோ மருத்துவரின் பரிந்தரை சீட்டு அடிப்படையில் மருந்து வழங்கப்பட வேண்டும் என மருந்தியல் சட்டம் பிரிவு 42 கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகளில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டு போலி மருந்தாளுநர்கள் மூலம் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே மருந்துகள் வழங்கப்படுகிறது.

மருந்துகளைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத இவர்களால் பிழைகள் ஏற்பட்டு பக்க விளைவுகளும், சில நேரங்களில் மரணங்களும் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் மருத்துவரை அணுகாமல் போலி மருந்தாளுநர்களிடம் மருந்துபெற்று உட்கொள்கின்றனர்.

ஆரம்ப அறிகுறிகள் சரியாகிவிட்டது என்று உரிய மருத்துவரின் உதவிகளைப் பெறாமல் ஒரு வாரம் கழித்து ஏற்படும் மூச்சுத்தினறலுடன் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால், பலர் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மருத்துவரை அணுகி பதிவுபெற்ற மருந்தாளுநர்களிடம் மருந்துகளை எடுக்காததே கடந்த இரண்டாம் அலையில் கணிசமான உயரிழப்புக்கு காரணமாகும்.

வலி மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போலி மருந்தாளுநர்களிடம் வாங்கி போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் போக்கு சமீப காலமாக இளைஞர்களிடம் வேகமாக பரவி வருகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தடுத்திடும் வகையில் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தாலும் அபராதமாக ரூ.500 செலுத்திவிட்டு மறுநாளே இத்தகைய முறைகேடுகள் தொடர்கின்றன.

எனவே, எந்த பதிவுபெற்ற மருந்தாளுநர்களின் சான்றிதழைக்கொண்டு மருந்துக்கடைகள் இயங்குகிறதோ அந்த நபரே அங்கு முழுநேரப் பணியாளராக பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். முழுநேரமாக பணிபுரியாமல் சான்றிதழை மட்டும் வாடகைக்கு வழங்கும் மருந்தாளுநர்களின் பதிவுச் சான்றிதழை தடைசெய்ய வேண்டும்.  இதுவே பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாக்க உதவும். வலி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக இளைஞர்கள் பயன்படுத்தும் போக்கு தடைபடும்.

சட்டமன்ற உறுப்பினராகிய தாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்


Top