logo
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கு:ஈரோடு நீதிமன்றத்தில்  சீமான் உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கல்

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கு:ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கல்

18/Dec/2020 10:28:13

ஈரோடு- டிச: ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 3 பேர், ஈரோடு கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொண்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்த்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். 

இதில், இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக ஈரோடு கருங்கல்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக ஈரோடு நீதிமன்றம்  அறிவித்தது. இதற்காக, சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் வியாழக்கிழமை ஈரோடு  விரைவு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து, நீதிபதி வடிவேல் முன் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக்கொண்டனர். 

 இதையடுத்து, இவர்கள் மூவரையும் வரும்  ஜனவரி-5-ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியை அமைப்போம் என கூறிக்கொண்டு எம்.ஜி.ஆர். போன்றவர்களை முன் நிறுத்தி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. மத்திய அரசின் வேளாண் சட்டம் நன்மையானது அல்ல.

 விவசாயிகள், மக்களிடம் கருத்து கேட்காமல் வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளனர். தில்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம், வேளாண் சட்டத்தினால் நன்மை இருக்குமானால் அதனை மத்திய வேளாண் துறை அமைச்சர் நேரில் விளக்கம் தர வேண்டும். அதேபோல், வேளாண் சட்டம் நல்லது தான் என கூறும் தமிழக முதல்வர் அதனை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது, மொழி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர்களுக்கு அவரது கட்சியினர்  நீதிமன்ற  வளாகம் முன்திரண்டு வரவேற்பு அளித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 


Top