logo
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மறியலில்  ஈடுபட்ட இடதுசாரி விவசாய சங்கத்தினர் 129 பேர் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இடதுசாரி விவசாய சங்கத்தினர் 129 பேர் கைது

05/Dec/2020 09:04:14

புதுக்கோட்டை:  தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர் 129 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ஏ.ராமையன், எஸ்.சி.சோமையா, கே.நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலளர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், வி.துரைச்சந்திரன், ஜி.நாகராஜன்.

சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன், ராமச்சந்திரன், சிபிஐ(எம்எல்) மாவட்ட நிர்வாகிகள் வளத்தான், சத்தியமூர்த்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரத் தலைவர் எஸ்.விக்கி, செயலாளர் எஸ்.பாபு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா மற்றும் 7 பெண்கள் உட்பட 129 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையினர் அத்துமீறியதாக புகார்: போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்பட்டத்தை எரிக்க முற்பட்டனர். அதை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டுக்கொண்டிருந்த வாலிபர் சங்க நகரத் தலைவர் எஸ்.விக்கியின் சட்டையை கிழித்தும், மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியாவை கீழே தள்ளி தாக்கியும் போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஓவியா மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.

மோடி உருவப்படம் எரிப்பு: இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்தும், காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்தும், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்து முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிகவும் சிரமப்பட்டு போலீசார் கைதுசெய்து வேனில் ஏற்றினர்.

இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்: இதுகுறித்து, இடதுசாரிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கவிவர்மன், மு.மாதவன், பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட காவல்துறையினரின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும், காவல்துறையினர் இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Top