logo
பாம்பனில் 7-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்.. 470 கி.மீ. தொலைவில் புரெவி மையம் இன்று 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

பாம்பனில் 7-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்.. 470 கி.மீ. தொலைவில் புரெவி மையம் இன்று 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

03/Dec/2020 12:50:08

சென்னை :  வங்கக்கடலில் உருவான ‘திரெவி’ புயல் இன்று திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்து தமிழக கரையை நோக்கி 25 கிலோமீட்டர் வேகத்தில்  நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக  தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 புரெவி புயல்  இலங்கையில் கரையை கடந்த பின்னர் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இதே போல் நாகை, கடலூர்,தூத்துக்குடி உள்ளிட்ட மற்ற துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புரெவி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்தப் புயலானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தற்போது 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்காக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இன்று காலை மன்னார் வளைகுடா பகுதி வழியாக குமரிக்கடல் பகுதிக்கு வரக்கூடும்.

இதனால், இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், விழுப்புரம், கடலூர், நாகை, புதுவை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யும். இன்று இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் அதிகனமழை பெய்யும்.

 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்: அடுத்த மூன்று நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னர் வளைகுடா ஆகியப் பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் கடும் சீற்றத்துடன், ராட்சத அலைகள் எழும். இன்று இரவு வரையில் அதே நிலை தொடர்ந்து, பிறகு படிப்படியாக சீராகும்.

குமரி முனைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தமிழகம் -கேரளத்தின் தென்பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் கடும் சீற்றம் இருக்கும். இன்று மற்றும் நாளை கடும் சீற்றத்துடன் ராட்சத அலைகள் வீசும். லட்சத்தீவுகள் – மாலத்தீவு பகுதியிலும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் இன்று முதல் 5 -ஆம் தேதி வரையில் கடலில் கடும் சீற்றம் காணப்படும்.


Top