logo
இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு அப்பாடல்களே காரணம்: இளையராஜா

இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு அப்பாடல்களே காரணம்: இளையராஜா

08/Feb/2021 01:27:25

சென்னை: இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு பாடல்களே காரணம் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ இயங்கி  வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம் நடைபெற்று வந்தது. பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா இடம் மாற வேண்டும் என்று ஸ்டுடியோ நிா்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடா்ந்து, பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளார் இளையராஜா. இந்த ஸ்டூடியோவின் தொடக்க நாளில்  இயக்குநர் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறியதாவது:

ஏவிஎம், விஜயா, ஜெமினி  உள்பட பல  ஸ்டூடியோக்கள் இன்று காணாமல் போய்விட்டன.  அந்தப்பட்டியலில் பிரசாத் ஸ்டூடியோவும் சேரவேண்டும் என்றுதான் அங்கிருந்து  நான் வெளியேறிவிட்டேன். என் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோவை இப்போது ஆரம்பித்துள்ளேன். வெற்றிமாறனின் புதிய படத்துக்காக பாடல் பதிவுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் சில வேலைகள்  முடிய வேண்டியுள்ளதால் அடுத்த ஒரு வாரத்தில் ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கும். 

இன்று எது நவீனத்துவமோ அந்த நவீனத்துவம் ஸ்டூடியோவில் உள்ளது.பிரசாத் ஸ்டூடியோவை விட்டு புதிய ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளது குறித்து வருத்தம் உள்ளதா எனக் கேட்கிறீர்கள். கடந்துபோன  வாழ்க்கைக்கு வருத்தப்படுவோமா. அதற்கு வருத்தப்பட்டு இன்று வேலை செய்யாமல் இருந்து விடுவோமா. அது அது  வருகிறது,போகிறது. அப்படித்தான் நாமும் போய்க்கொண்டே இருக்கிறோம்.

 மழை பெய்கிறது, காக்கை எச்சமிடுகிறது என்பதற்கெல்லாம் என்ன செய்ய முடியும். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். எல்லாம் சவால் தான்.  முன்னேறுகிறவனைத் தடுப்பதற்கு எவ்வளவோ இடைஞ்சல் வரும். நம் வேலையை விடா முயற்சியுடன் செய்யும்போது நாம் அடைகிற இடமே வேறாக இருக்கும். 

வெற்றிமாறன் படம் பற்றி நீங்கள் வெற்றிமாறனிடம் தான் கேட்க வேண்டும்.இப்போதைய சினிமாவில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றால் பாடல்கள் அப்படி இருக்கிறது. அதனால் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல்தான் முக்கியத்துவத்தைப் பெற வேண்டும். பாடலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல் உங்களைப் பிடித்து இழுக்க வேண்டும். வேண்டுமென்று பாடலைப் போடச்சொன்னால்,  போட முடியாது என்றார்.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவுக்குப் பிறகு வெளியே வந்த பிறகு எனக்கு ரெக்கார்டிங் தியேட்டர் தேவைப்பட்டதால் இந்த தியேட்டரை வாங்கி புதிய ஸ்டூடியோ  தற்போது பூஜையுடன்  தொடங்கப்பட்டுள்ளது. உள்ளே சில வேலைகள் உள்ளதால் 8, 9 தேதிகளில் இருந்து இசையமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  

மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தெந்த இடத்தில் இருந்து எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் இசையமைப்பதைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படி பாடல் தருவீர்கள் என்று கேட்டால் யாரால் என்ன சொல்ல முடியும். மழை எப்போது வருகிறது என்று மழையிடம் கேட்க முடியுமா என்றார்.

Top