logo
ஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக் கூடாது: காவல்துறை உத்தரவு

ஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக் கூடாது: காவல்துறை உத்தரவு

29/Nov/2020 03:46:39

சென்னை: சென்னையில் ஹெல்மட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் போடக்கூடாது, என பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.ஹெல்மெட்- அணிந்தால் மட்டுமே பெட்ரோல் கிடைக்கும் என்று விற்பனை நிலையங்கள் முன்பு பதாகை வைக்கவும் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஹெல்மெட் (தலைகவசம்) அணியாததால்தான் அதிக உயிர்பலி நடக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும், NO HELMET NO PETROL என்கிற போர்டை வைக்கவும் உத்தரவிட்டு அதை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இனி சென்னையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட ஹெல்மட் அணியாமல் சென்றால் பெட்ரோல் போட முடியாது. இது ஹெல்மட் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.


Top