logo
மாநகர் பகுதியில் கடந்த ஓரு ஆண்டில் 2,500 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

மாநகர் பகுதியில் கடந்த ஓரு ஆண்டில் 2,500 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

08/Nov/2020 12:45:22

ஈரோடு:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதியில் சேர்க்கப்படும் குப்பைகளிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதன்படி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 19 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த ஒரு  ஆண்டுகளாக மக்கும் குப்பையில் இருந்து உரங்கள் தயாரிக்கப் பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்கள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்ததால் விவசாயிகளிடம் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றது. நாளடைவில் உரங்களை வாங்க விவசாயிகள் கடும் போட்டி போட்டனர்.  இலவச உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் அந்த மையத்துக்கு நேரடியாக சென்று தங்களது பெயர் அடையாளங்களைப் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் உரங்களை பெற்று வந்தனர்.  தற்போது ஆன்லைன் மூலம் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாநகராட்சி பகுதியில் தினமும் 16 வகையான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது அவை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையில் இருந்து உரங்கள் தயாரிக்கப் பட்டு அவை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 2,500 டன் உரங்கள் தயாரிக்கப் பட்டு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

Top