logo
கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம்- தேர் திருவிழா: கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்ட பெண்கள்

கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம்- தேர் திருவிழா: கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்ட பெண்கள்

27/Nov/2020 04:10:01

ஈரோடு: ஈரோடு அருகிலுள்ள கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் பெரிய மாரியம்மன் கோவிலின் குண்டம்- தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம்- தேர்த்திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

26 -ஆம் தேதி சின்ன மாரியம்மன் பெரிய மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடந்து வருகிறது. இன்று காலையில் இருந்து கோவில்களில் வைக்கப்பட்டுள்ள காண்பதற்கு ஏராளமான பெண்கள் பயபக்தியுடன்  வந்து புனித நீர் ஊற்றியும் பால் ஊற்றியும் வழிபட்டனர். இன்று முதல்  தொடர்ந்து   9 நாட்களுக்கு  கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த வருடம் பொதுமக்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை. அதைப்போல் தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதி இல்லை. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு குண்டம் பற்ற வைத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ஆம் தேதி கோயில் பூசாரி மட்டும் குண்டம் இறங்குகிறார் .

இதேபோல் தேரோட்டத்திற்கு பதிலாக தேர் பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 7 -ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் எடுக்கப்படுகிறது. 8-ந் தேதி காலை பொங்கல் வைத்தல் ,மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9- ஆம் தேதி கம்பம் எடுக்கப்படுகிறது. பத்தாம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, திருவீதி விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

கொரோனா காலகட்டம் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும்.அதேபோல் சமூக இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் , 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Top