logo
திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் நோக்கம்: எல்.முருகன்

திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் நோக்கம்: எல்.முருகன்

20/Nov/2020 04:58:21

ஈரோடு: போலி சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம் என  பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.  

 ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:முருகன் என்பது ஒரு சொல் அல்ல,நமது வாழ்வின் ஒளி. பல்லாயிரம் ஆண்டு நாம் தொழுது வந்த இந்த கடவுளை, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடமாட்டோம்.

திருத்தணியில் ஆரம்பித்த வேல்யாத்திரை அறுபடை வீடுகளுக்கும் செல்லும். கந்தசஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டத்தினர் ஆபாசமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் பேசினர். சென்னிமலையில் பாலதேவராயரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பின்னணியில் உள்ள திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களின் முகமூடியை கிழித்து பொதுமக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். 

நமது தாய்மார்கள் நவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்யும் நேரத்தில், பெண்களை கேவலமாகப் பேசியவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். அவர்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். அதனால்தான், யாத்திரைக்கு வரவேற்பு கூடியுள்ளது.

திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்பதற்கு அவர்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.மான பூங்கோதையே உதாரணம்.         நேற்றைய தினம் திமுக நிர்வாகிகளிடம் பூங்கோதை காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறார். அவர்கள் கட்சிக்காரர்களாக இருந்தாலும் இதை எப்படி ஏற்க முடியும்? எனது சகோதரிக்கு ஒரு பங்கம் எனில், அதை தட்டிக்கேட்பது பாஜகவின் கடமை. பூங்கோதை ஆலடி அருணா பாதிக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில்,  பூங்கோதை தற்கொலைக்கு முயன்றதாக தகவல். இன்றைக்கு வரை இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நமது சகோதரிக்கு எப்படி பாதுகாப்பு  கிடைக்கும்? .

    நாளைக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரமாக இருக்க முடியாது.  பட்டியலின சகோதர்களுக்கும் திமுக எதிராக உள்ளது. அவமரியதையாக  பேசுகின்றனர். இதுதான் அவர்கள் சமூகநீதி. உண்மையான சமூகநீதி, சமத்துவம் பாஜகவிடம்தான் உள்ளது. போலி சமூகநீதி, சமத்துவம் பேசுகின்ற திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம். கறுப்பர் கூட்டத்தை, காவிக்கூட்டம் ஓட, ஓட விரட்டும்.

மத்திய அரசு விவசாயிகள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் பாஜக  தொண்டர்கள் செய்த  செய்த பணியை யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த யாத்திரை நடக்கிறது. நம் பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம். தமிழகம் ஆன்மிக பூமி, தெய்வீக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில், தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீர்மானிக்கும்.

எத்தனை தடை வந்தாலும் இந்த யாத்திரை டிசம்பர் 7-ஆம் தேதி திருச்செந்தூர் வரை சென்று சேரும் என்றார்.    தொடர்ந்து யாத்திரை புறப்பட முயன்ற எல்.முருகன், துணைத்தலைவர்கள் அண்ணாமலை,  நரேந்திரன் உள்ளிட்ட 1,000- க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Top