logo

நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

19/Nov/2020 06:59:27

ஈரோடு: ஈரோடு ,கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3  நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும், பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கும்  தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 95.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3170 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரத்து 1500 கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3  நாட்களாக அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நிரம்பி வருகிறது.குண்டேரிப்பள்ளம் 36.10 அடியாக உள்ளது. அணைக்கு 6 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. வரட்டு பள்ளம் - 29.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் 14.04 அடியாக உள்ளது. 


Top