logo
பாம்பன் ரெயில் பாலத்தில் மோதிய மிதவை 9 நாளுக்கு பின்பு அகற்றம்: ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

பாம்பன் ரெயில் பாலத்தில் மோதிய மிதவை 9 நாளுக்கு பின்பு அகற்றம்: ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

18/Nov/2020 07:13:31

ராமநாதபுரம் மாவட்டம் ,மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில், கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல் 100 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாகி விட்டதால் அந்தப் பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனுடன் கூடிய இரும்பினால் ஆன மிதவையானது, பாம்பன் ரெயில் பாலத்தின் மீது கடந்த 9-ஆம் தேதி அன்று இரவு மோதியபடி நின்றது. ஆனால் தொடர்ந்து வீசிய காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாலத்தின் மீது மோதி நின்ற மிதவையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.


இதைதொடர்ந்து, மிதவையை மீட்கும் பணியானது 9-ஆவது நாளாக நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மிதவையின் மீது நிறுத்தப்பட்டிருந்த கிரேனில் உபகரணங்களை வெல்டிங் செய்து அகற்றி எடையை குறைத்த பின்னர் 3 மீன்பிடி படகுகள் உதவியுடன் மிதவை ஆனது கயிறு கட்டி இழுத்து மீண்டும் கரையோரம் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று ரெயில் பாலத்தை தனியாக என்ஜின் மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. மிதவை மோதி நின்ற நிலையிலும் பாம்பன் ரெயில் பாலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. கடந்த 9 நாட்களாக ராமேசுவரத்திலிருந்து செல்லக்கூடிய சேது எக்ஸ்பிரஸ்  மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், மிதவை அகற்றப்பட்டதை தொடர்ந்து வழக்கம்போல் பயணிகளுடன் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. 


Top