logo
பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது: தமிழக பாஜக தலைவர் எல் முருகன்

பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது: தமிழக பாஜக தலைவர் எல் முருகன்

26/Oct/2020 11:06:18

சென்னை: மனுஸ்மிருதியை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாள்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். அதில்  பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து, பாஜக தலைவர் எல். முருகன்  இன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில்,  நாம் அனைவரும் மீனாட்சி உள்ளிட்ட பெண் தெய்வங்களை தினசரி வழிபடுகிறோம். இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என இதுவரை ஸ்டாலின் வெளிப்படையாக கூறவில்லை.

தாய்மையை சிலர் கேவலப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். தவறு செய்பவர்களை காப்பாற்றுவதுதான் அவரின் வேலையே. ஆனால் பெண்களை மதிக்கும் போற்றும் கட்சி பாஜக. தெய்வமாக வழிபடும் சகோதரிகளை தவறாக பேசியோருக்கு பாடம் புகட்ட பெண்கள் காத்திருக்கிறார்கள். பட்டியலின மக்களை கேவலப்படுத்தினாலும் ஸ்டாலின் கண்டிக்கமாட்டார். தாய்மார்களை, சகோதரிகளை கேவலப்படுத்தினாலும் ஸ்டாலின் கேட்கமாட்டார்.

ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் செல்ல முடியாது. நடமாட முடியாது. வெளியில் வந்து தாய்மார்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு பெண்களிடமும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விடமாட்டார்கள். ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்து விட்டது.

2021 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். பாஜகவினரை சட்டசபைக்கு அனுப்பும் வேலையைத்தான் நான் செய்கிறேன். மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளன. நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி தடை செய்ய முடியும். இந்திய அரசு அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படியே ஆட்சி நடத்துகிறதே தவிர மனுஸ்மிருதியின் படி அல்ல என்றார் அவர்.


Top