logo
7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான்: அமைச்சர் செங்கோட்டையன்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான்: அமைச்சர் செங்கோட்டையன்

26/Oct/2020 07:36:23

 ஈரோடு: தமிழக அரசுதான் மருத்துவ படிப்பில் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  எதிர்க்கட்சிகள் இன்று 7.5 சத இட ஒதுக்கீடு குறித்து கேள்வி கேட்கின்றன. ஆனால் அவர்கள் யாரும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை. ஒதுக்கீட்டுக்கான முயற்சியை மேற்கொண்டு சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும், என்றார்.

 மேலும் அவர் கூறுகையில், வெள்ளாளபாளையம் ஊராட்சியில் ஆரம்ப கூட்டுறவு சங்கத்தில் ரூ.26 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .அதன் திறப்பு விழாவில் பொதுமக்களுக்கு ரூ.86 லட்சம்  கடனுதவி  வழங்கப்பட்டது . இந்த ஊராட்சியின் நிகர வருமானம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே. ஆனால் ரூ. 6 கோடி அளவிலான வளர்ச்சிப் பணிகள் நடப்பாண்டு மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப்பகுதி மக்கள் வைத்த ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அங்குள்ள பள்ளியில 4 வகுப்பறை கட்டிடமும் ஆய்வுக் கூடமும் கட்டும் பணி நடந்து வருகிறது. வரும் டிசம்பருக்குள் பணி முடிவடையும்.நாதிபாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று வாரிய வீடுகள்  இங்குள்ள மக்களுக்கு இலவசமாக வரும் ஜனவரியில் ஒப்படைக்கப்பட்டுவிடும். 

ஒரு சிறிய கிராம ஊராட்சிப் பகுதியிலேயே இந்த அளவுக்கு வளர்ச்சி பணிகள் வேகமாக நிறைவேற்றப்படுகிறது என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு பணிகள் அரசின் சார்பின் நிறைவேற்றப்படுகின்றன என்பதை எண்ணி  பார்க்க வேண்டும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

 ஈரோடு மாவட்ட பால்வளத் தலைவர் காளியப்பன், கோபி ஒன்றிய செயலாளர மனோகரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம்,  வழக்குரைஞர் வேலுமணி நம்பியூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வெள்ளாளபாளையம் ஊராட்சி மன்றத் தலைவி சத்தியபாமா உள்பட பலர் உடனிருந்தனர்.

Top