logo
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அக்.28 -இல் நடைபெறும்  காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அக்.28 -இல் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு

25/Oct/2020 05:52:56

ஈரோடு: ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்த மாதம் 1000 ரூபாய் ஊதிய உயர்வை உடனடியாக வழங்கக்கோரி அக் 28-இல் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள மாபெரும்  

தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கு  ஆதரவு தருவதாக பெருந்துறை ஒன்றிய தூய்மைக் காவலர்கள்  அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) உடன் இணைந்த ஈரோடு மாவட்ட தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் பெருந்துறை ஒன்றிய பொறுப்பாளர் தோழர் கே.எம்.ஜெயபாரதி தலைமையில் பெருந்துறை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: தினமும் 100 ரூபாய் ஊதியத்திற்கு ஊர்க்குப்பைகளை அகற்றி வரும் ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு தமிழக அரசு கடந்த 16-10-2020 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த மாதம் 1000 ரூபாய் ஊதிய உயர்வை (மாதம் 2600 ரூபாயை 3600 ரூபாயாக) உடனடியாக வழங்க வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தூய்மைக் காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதை  வலியுறுத்தி ஏஐடியுசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் வரும் 28-10-2020 அன்று தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. தலைமையில் சங்கத் தலைவர்  முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெருந்துறை ஒன்றிய ஊராட்சி தூய்மைக்காவலர்கள் பெறுமளவில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 முன்னதாக கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்தல், ஊராட்சி வாரியான கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட சங்க முடிவுகளைப் பற்றியும் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி விளக்கிப் பேசினார். சங்க நிர்வாகிகள் செல்வி, கலாமணி, ஈஸ்வரி, நாச்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சங்க கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top