logo
முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை: எஸ்.ரகுபதி குற்றச்சாட்டு

முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை: எஸ்.ரகுபதி குற்றச்சாட்டு

22/Oct/2020 01:41:25

புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக எம்எல்ஏகளுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சரும், திமுக திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கும் அதிமுகவினரை எதிர்த்து வாக்களிக்க செய்திருந்தாலே அவர்கள் கூறுவதுபோன்று விவசாயிகளின் பாதுகாவலராகவே தமிழக முதல்வர் போற்றப்பட்டிருப்பார். ஆனால், விவசாயிகளை பாதிக்கக்கூடிய அந்த மசோதாக்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்தவரை தமிழக விவசாயிகள் எப்படி விவசாயிகளின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்வார்கள்?

  காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது திமுகவின் லட்சியத் திட்டம்.அதனால்தான், இத்திட்டத்தின் தொடக்கமாக கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் திமுக ஆட்சியின்போது (2010-இல்) ரூ.210 கோடியில் கதவணை கட்டப்பட்டது.அதன்பிறகு, அட்சியில் இருந்து வரும் அதிமுகவினர் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செய்திருந்தாலே இந்நேரம் காவிரி தண்ணீர் மாவட்டத்துக்குள் வந்திருக்கும்.முப்போகமும் விளைந்து ஊர் செழித்திருக்கும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு ஆட்சிக் காலத்தின் இறுதியில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக கூறுகிறார்கள். இவர்களால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அப்போது, இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

  புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்துக்கு இம்மாவட்டத்தைச் சேர்ந்த 3 திமுக எம்எல்ஏக்களுக்கும் முறையான அழைப்பு இல்லை. கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தால் 2 தினங்களுக்கு முன்பே கரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும். தகவல் இல்லாததால் நாங்கள் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் எவ்வாறு செல்ல முடியும்? கூட்டத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அதிமுகவினர் சதி செய்துள்ளனர் என்றார்.

Top