logo
ஆதார் அட்டையும் செல்பேசி எண்ணை இணைப்பதில் நீடிக்கும் சிக்கலை தீர்க்க கோரிக்கை

ஆதார் அட்டையும் செல்பேசி எண்ணை இணைப்பதில் நீடிக்கும் சிக்கலை தீர்க்க கோரிக்கை

16/Oct/2020 08:58:15

புதுக்கோட்டை: ஆதார் அட்டையுடன் செல்பேசி எண்ணை இணைக்க முடியாமல் மக்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள ஆதார் எண்ணுடன் தற்போது பயன்படுத்தப்படும் செல்பேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதில் நீடித்து வரும் நடைமுறைச்சிக்கல்களுக்கு தீர்வுகாண  தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஏஐடியுசி புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் கே.ஆர். தர்மராஜன் வெளியிட்ட அறிக்கை:

கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் சிலருக்கு ஆதார் அட்டை புதிதாக முதலில் பெற்றபோது இணைக்கப்பட்ட செல்பேசி எண் இப்போது பல்வேறு காரணங்களால் அவரிடம் இல்லாமல் போய்விட்டது.

தற்போதைய வாழ்க்கைச் சூழலில் தொடர்ச்சியாக ஒருவரால் ஒரே செல்பேசி எண்ணை பயன்படுத்த  முடியவில்லை. சில செல்பேசி கம்பெனிகள் தங்கள் சேவையை நிறுத்தியதால் செல்பேசி எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

தற்போது பயன்பாட்டில் உள்ள செல்பேசி எண்ணை இணைப்பதற்கு மக்கள் முயற்சிக்கும்போது பெரும் சிக்கல் ஏற்பட்டு, அங்குமிங்கும் அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் காத்திருக்கிறது பெரும் கூட்டம் இணைக்க முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தனியார் -சேவை மையங்கள் தபால் நிலையங்களில் இணைக்கும் இந்த வசதியை அரசு நிறுத்திவிட்டது எனச் சொல்கிறார்கள்.

 எனவே, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையம் மட்டுமே இப்பணியை செய்ய முடியும் என்கிற நிலை. அங்கே அடுத்த ஆண்டு 2021 வரை நாட்கள் குறித்த டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் நல வாரியங்கள் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்வது புதுப்பித்தல் பணி உதவி கோருவது எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும். நலவாரியத்தில் உரிய  நேரத்தில் புதுப்பிக்கா விட்டால் எந்த பயனும் கிடைக்காது.

 குறிப்பாக ஓய்வூதியம் பெற ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேல் நலவாரியத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்திருந்தாலும் 60 வயது முடியும் முன் இறுதியாக புதிப்பித்து அட்டை நடப்பில் இருந்தால் தான் ஓய்வூதியம் பெறமுடியும். அதனால் தற்போது 60 வயது நிறைவடையும் தருவாயில் உள்ள நபர்கள் ஆதார் செல்பேசி எண்ணுடன் இணைக்க முடியாமல் போனதால் நலவாரியத்தில் புதுப்பிக்க முடியாமல் பரிதவிக்கிறார்கள். 30  ஆண்டுகள் காத்திருந்து கடைசியில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோபுதுப்பிக்காமல் ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 அவசரத்திற்கு செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க முடியவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கூர்ந்து கவனித்து உடனடியாக ஆதார் செல்பேசி எண்களை இணைக்க அதிக மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

 தலைமை தபால் நிலையம் முதல் கிராமத்தில் இயங்கும் தபால் நிலையம் வரையும் மேலும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் இணைக்கும் வசதியை ஏற்படுத்தினால் உதவியாகரமாக இருக்கும்.

சிறப்பு முகாம்களை அமைத்து அவசர கால உதவியாக இப்பணியை மேற்கொண்டால் தான் அனைத்து தொழிலாளர்களும் பொதுமக்களும் உரிய நேரத்தில் உரிய பயன் பெற முடியும் இல்லையேல் நல வாரியத்தை நம்பி ஆண்டுக்கணக்கில் காத்திருந்தவர்கள் ஆதார் எண்ணுடன் செல்பேசி நம்பரை இணைப்பதில் தாமதம் ஏற்படுவதால் உடல் நலிந்த நிலையிலும் ஓய்வு ஊதியம்பிற உதவிகளும் கிடைக்காமல் பெருந்துயரை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

 

Top